Pages

Sunday 9 June 2013

அக்கினிக் குஞ்சுகளாய் புறப்படும் நாளைய ஆயிஷாக்களுக்கு…


01.உங்கள் எதிர்காலத்தை இறைவனின் துணை கொண்டு நீங்கள் தான் செதுக்கப்போகிறீர்கள்,, சிந்தியுங்கள், உங்களுடைய இன்றைய ஒவ்வொரு அசைவும்,பணியும் அந்த நாளைக்கான முதலீடுகளே.இன்று விதைப்பதை விட அறுவடை வித்தியாசமாகி விடாது,எனவே எதை விதைப்பது என்பதில் கரிசனையோடிருங்கள்.

02.என்னை ஊக்குவிக்க எவருமில்லை என்ற கண்ணீர்த்துளிகளை விட்டொழியுங்கள்.ஏணியில் ஏறும் போது காலை இழுத்து விடும் உலகம் இது.உங்களை தோள் தட்டி உற்சாகப்படுத்தும் துணை வேறு யாருமல்ல நீங்களே தான்; உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.

03.அறிவு சுடர்விடும் உள்ளத்தில் அடக்கம் நிச்சயம் ஆட்சி பீடத்தில் இருக்கும்.உங்கள் அறிவு நீங்கள் இன்னும் எவ்வளவு அறிய வேண்டியிருக்கிறது என்பதை காட்டித்தரும் கலங்கரை விளக்கம்.நான் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறேன் என்ற மமதை அழிவுக்கு இட்டுச் செல்லும்.

04.தேடலும் வாசிப்பும் ஆழ் சிந்தனைக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் அத்தியாவசமானவை.செய்திகளையும் தகவல்களையும் நாம் தேடியறியும் காலம் போய் அவை எம்மைத்தேடி வருமொரு யுகம் இது.நம் பெண்களில் பலர் இன்னும் தேடலைத்தொலைத்தவர்களாக வாசிப்பார்வம் அழிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது.எதையும் கேட்டவுடன் அதை நம்பி விடாமல் தேடி வாசித்து உண்மையை அறிந்து கொள்ளும் ஆளுமை வளரட்டும்.

05.உங்கள் பேச்சு உங்கள் ஆழம் சொல்லும்.நீங்கள் பேசும் தொனி மற்றும் பேசு பொருள் பற்றி கவனமாயிருங்கள்.இடம்,சந்தர்ப்பம் சூழலுக்குத் தகுந்தவாறு பேசுங்கள், மொழியின் முதல் நோக்கம் தெளிவான முறையில் கருத்துக்களைப் பரிமாறுவதாகும்.

06.உங்கள் பெற்றோர்கள் மற்றும் முதிர்ந்தவர்கள் இன்னொரு காலப்பரிமாணத்தை சேர்ந்தவர்கள்;அவர்களுக்கு கிடைத்தை சில வாய்ப்புக்கள் எமக்குக் கிடைக்கவில்லை; எம் காலம் சார்ந்த சில முன்னேற்றங்களில் அவர்கள் பங்காளார்களாய் இல்லை.அவர்களின் அனுபவத்திற்கு செவிகளையும் இதயங்களையும் கொடுக்க மறவாதீர்கள்.அவர்களை கண்ணியப்படுத்துங்கள்.


07.விளையும் பருவத்திலேயே ஒரு துறையைத் தேர்ந்தெடுங்கள்; அந்தத்துறை சார்ந்து நிபுணத்துவம் பெறுவதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் பாண்டித்தியம் பெற முடியாதா என்ற கேள்விக்கு விடை முடியும் என்பதே. எனினும் ஒரு துறையில் குறிப்பிட்டளவு உங்களைச் செதுக்கிய பின்னரே இன்னொரு துறையில் முயற்சிப்பது உங்களை வெற்றியாளர் ஆக்கும்.


08.உங்கள் குடும்பங்கள் நீங்கள் அமைதி பெறும் பூங்காக்கள்.எந்த வானில் சிறகடித்துப் பறந்தாலும் குடும்பத்தில் உங்கள் பாத்திரத்தை மறந்து விடாதீர்கள்.அன்புள்ளம் கொண்ட சகோதரியாய், நிறைவானதோர் துணைவியாய்,பொறுப்புள்ளதோர் அன்னையாய் உங்கள் பணிகளை திருப்தியோடும் மகிழ்வோடும் நிறைவேற்றுங்கள்;உங்கள் உள்ளத்திற்கு இவை ஆறுதல் அளிக்கும்.


09. சுய அடையாளங்களை அடகு வைத்து விட்டு பிற அடையாளங்களுக்காய் ஏங்கும் உலகமிது.உங்கள் சுயத்தை தொலைத்து விடாதீர்கள்.நீங்கள் எந்த விடயத்தை செய்வதாக இருந்தாலும் சரி ஹிஜாப் அணிவதாக இருந்தாலும் கூட உங்களுக்கென்றொரு முறையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.எல்லோரும் செய்கிறார்கள் என்பதனால் மட்டும் ஒரு விடயத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள்.


10.உங்கள் தரத்தை கூட்டிக் கொள்ளுங்கள். விலையுயர்ந்த ஆடைகள், நகைகள் மற்றும் உங்களை தூக்கிக் காட்டும் ஒப்பனை சாதனங்களால் உங்கள் தரத்தை ஒரு போதும் உயர்த்தி விட முடியாது.தெளிவான சிந்தனை, ஆழமான பேச்சு மற்றும் வினைத்திறன் கொண்ட வேலைகள் உங்கள் தரத்தை அதிகரிக்கும்.மலினமான நாவல்கள்,தொலைக்காட்சி சீரியல்களுக்கு மேலால் நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது.

11.இறைவனும் நெருக்கமான தொடர்பு வையுங்கள்.உங்கள் சொந்த மனதின் சொல்லாத கவலைகள், சிக்கல்கள்,நெருடல்கள் அனைத்தையும் இறைவன் முன் சமர்ப்பியுங்கள்.உங்கள் உள்ளத்தை தன் விரல்களுக்கிடையில் வைத்திருப்பவன் அவனே. (சமீலா யூசுப் அலி, பீனிக்ஸ் இதழ் 2013,




Home  

No comments:

Post a Comment